"ஹிந்திதான்" இந்தியாவின் அடையாளம் என்று சொல்லும் உங்களுக்கு !


ஹிந்திதான் இந்தியாவின் அடையாளம் என்று சொல்லும் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். இந்தக்கடிதத்தை ஒரு கேள்வியுடன் துவக்குகிறேன்: இந்தியாவின் அடையாளமாக இந்தி இருக்க வேண்டும் என்கிறீர்கள். அந்த அடையாளத்தை வைத்து உலக அரங்குக்கு போவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இந்தியின் அடையாளம் என்பது என்ன? அதாவது இந்தி என்றவுடன் உங்கள் மனதில் வரும் வார்த்தை என்ன? இலக்கியம்? பொருளாதாரம், சமூக முன்னேற்றம்?

பொருளாதாரத்துக்கு பெயர் பெற்றது மகாராஷ்டிரா மற்றும், முக்கியமாக, மும்பை: அங்கே மராட்டி கலந்த ஒரு மொழி பேசப்படுகிறது. பங்குச்சந்தையை ஆண்டு கொண்டு இருப்பது பெரும்பாலும் குஜராத்திகள்.

இசைக்கு இன்று உலகில் பெயர் பெற்றிருப்பது பாங்க்ரா என்ற பஞ்சாபி கலாச்சாரத்தின் இசை. இந்தியாவின் இசைக்கலைஞர் என்றால் உலகுக்கு நினைவுக்கு வருவது ரஹ்மான் எனும் தமிழர். அவருக்கு முன்பு உலகப்புகழ் பெற்ற இந்திய இசைக்கலைஞர்கள் ரவி ஷங்கர் (பெங்காலி), ஜாகிர் ஹுசைன் (மகாராஷ்டிரர்), எல் சுப்ரமணியம் (தமிழர்).

தவிர, பாலிவுட்டிலேயே பார்த்தாலும் அங்கே இன்று இசை அமைத்துக் கொண்டு இருப்பது விஷால் (சிந்தி), சேகர் (குஜராத்தி), அமித் திரிவேதி (குஜராத்தி), பிரீதம் (பெங்காலி).

ஐடிக்கு பெயர் பெற்றது பெங்களூரு. அங்கே கன்னடம், தமிழ் ஆகியவைதான் முக்கிய மொழிகள். (ஐடி நிறுவனங்களின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பது தனி சமாச்சாரம்.)

இந்திய திரைப்படங்கள் என்றால் பெயர் பெற்றவை பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ். பாலிவுட்டில் இந்தி கிடையாது. அங்கே பயன்படுத்தப்படும் மொழி ஹிந்துஸ்தானி எனப்படும் இந்தி மற்றும் உருது கலவை. (தொண்ணூறுகளில் இருந்து பஞ்சாபியும் கூடவே சேர்ந்து கொண்டு இருக்கிறது.)

மனித வள முன்னேற்றம் என்று பார்த்தால் இந்தி பேச்சு மொழியாக இல்லாத தென் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன.

படிப்பறிவு என்று பார்த்தால் திரும்பவும் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் என்று பட்டியல் போகிறது.

இலக்கியம் என்றால் பெங்காலி, மராட்டி என்று சொல்ல வேண்டும். உலக அளவில் மாபெரும் மதிப்புக்குரிய இலக்கியப்பரிசு புக்கர் விருது. இதனைப் பெற்றவர்கள் யார் என்று பார்த்தால் சல்மான் ரஷ்டி (மகாராஷ்டிரர்), கிரண் தேசாய் (மகாராஷ்டிரர்), அருந்ததி ராய் (பெங்காலி + மலையாளி), அரவிந்த் அதிகா (கன்னடியர்). அமெரிக்காவில் புகழ் பெற்ற புலிட்சர் விருது பெற்ற இரண்டு இந்திய வம்சாவளியினர் சித்தார்த் முகர்ஜி, ஜும்பா லாஹிரி, இருவரும் பெங்காலிகள். இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் தாகூர், ஒரு பெங்காலி.

விஞ்ஞானம் என்றால் நமக்கு நினைவில் வரும் பெயர்கள் விக்ரம் சாரபாய் (குஜராத்தி), சதீஷ் தவன் (பஞ்சாபி), சி வி ராமன் (தமிழ்), அப்துல் கலாம் (தமிழ்), ஜெகதீஷ் சந்திர போஸ் (பெங்காலி). உலக அரங்கில் விஞ்ஞானத்துக்கு நோபல் பெற்ற இந்தியர்கள் எல்லாருமே தமிழர்கள்தான். சி.வி. ராமன், சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் ஒரு பெங்காலி.

இந்தித் தாய்மொழியாகக் கொண்டு நோபல் பெற்ற ஒரே இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. சிறார் தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க பங்களித்தமைக்கு அவர் நோபல் பெற்றார். சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் கொடுமைகள்தான் அத்துறையை தேர்ந்தெடுக்க அவருக்கு உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

திரைப்படக்கலைக்கு உலகின் மாபெரும் விருது என்று கருதப்படும் ஆஸ்கார் பரிசு பெற்ற இந்தியர்கள் பானு அத்தையா (மகாராஷ்டிரர்), சத்யஜித் ரே (பெங்காலி), ரஹ்மான் (தமிழர்), குல்ஸார் (பஞ்சாபி) மற்றும் ரெசுல் பூக்குட்டி (மலையாளி).

மருத்துவ வளர்ச்சி என்று கேட்டால் இந்தியாவிலேயே மருத்துவ வசதிகள் நிறைந்த மாநிலங்கள் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு என்று பட்டியல் போகிறது.

எனவே, இந்தி என்று நீங்கள் குறிப்பிடும் மொழியைப் பேசும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள். பொருளாதாரம், சமூகம், படிப்பறிவு, மருத்துவம், இலக்கியம் போன்ற எந்தத் துறையை எடுத்தாலும் கடைசி வரிசைகளில் இருக்கும் மாநிலங்களின் மொழி என்ன என்று பாருங்கள். இவற்றைத்தான் இந்தியாவின் அடையாளமாக உலகுக்கு காட்ட விரும்புகிறீர்களா?

இந்தியை இந்தியாவின் அடையாளமாக உலகுக்கு காட்டுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்தியை ஒரு முக்கிய அடையாளமாக, முக்கிய ரோல் மாடலாக இந்தியாவுக்கே கூட உங்களால் காட்ட முடியுமா என்று நான் கேட்கிறேன். மேலே குறிப்பிட்ட எந்த சாதனைக்கும் முன்னேற்றத்துக்கும் உதவி இராத, பங்களித்திராத ஹிந்தியை எந்த அடிப்படையில் தேசத்தின் அடையாளமாக உலகுக்கு காட்டப்போகிறீர்கள்? இந்தி படித்தால் ஆஸ்கார், புக்கர், புலிட்சர், நோபல் என்று ஏதாவது கிடைக்குமா? படிப்பறிவு வளருமா? இலக்கியம் வருமா? பொருளாதார வளர்ச்சி கிட்டுமா? விஞ்ஞானம் புரிபடுமா? இசை ஞானம் வருமா? மூளையை கசக்கிப் பார்த்து ஓரிரு பெயர்களை கொண்டு வந்தாலும், பெரும்பான்மை இந்தியற்றவர்களாகவே இருக்கும். சரி, மேலே குறிப்பிட்ட நிறைய பேர் இந்தி தெரிந்தவர்கள் என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களின் சாதனைகள் இந்தி தெரிந்ததால் மட்டுமே என்று வாதிட இயலுமா?  உதாரணமாக, ரஹ்மானுக்கு இன்று வரை கூட இந்தி சரியாகத் தெரியாது. ஆனால் பல்லாண்டுகளுக்கு பாலிவுட்டை ஆள முடிந்திருக்கிறது. ஆஸ்கார் வரை போக முடிந்திருக்கிறது.

தரவுகளை வைத்துப்பார்த்தால் இந்தி தெரிந்திருந்தால் இந்தியாவிலோ உலக அரங்கிலோ பெரிதாக சாதிக்க இயலும் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிட்டவில்லை.

இந்தியாவை உலகுக்கு மரியாதையாக அடையாளம் காட்ட வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஒன்றை பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்தியா பன்மொழிகளைக் கொண்ட, பல்-கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதை இன்னும் உரக்க உலகுக்குப் பரப்புங்கள். இங்கே யாரும் எந்த சாதனையையும் படைக்க முடியும். அவர்தம் மதமோ, மொழியோ, இனமோ தடையாக இருக்காது என்று சொல்லுங்கள். ஒரே மொழி கொண்ட நாடுகள் டஜன் கணக்கில் இருக்கின்றன. ஒரே மொழியை திணிக்க முயன்று நாசமாய்ப்போன நாடுகள் இருக்கின்றன. ஆனால் பல்மொழிகளைக்கொண்டு சாதித்துக்காட்டிய ஒரே தேசம் இந்தியா. இதனை உலக அரங்கில் மார் தட்டிப் பேசுங்கள்.  ஒற்றைத்துவத்துக்குப் பதிலாக பன்மைத்துவம், ஏதேனும் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்துக்கும் முக்கியத்துவம் தரும் கொள்கையைப் பின்பற்றும் நாடு என்ற செய்தி உலகிற்கு எட்டட்டும். அது உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கட்டும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள மொழிசமுத்துவத்தை..அதிகார மமதையால் சிதைக்கக்கூடாது என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

இப்படிக்கு
உங்கள் அன்புக்குடிமகன்

Post a Comment

0 Comments