370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?
டெல்லி: ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசாணை வெளியிட்டுள்ளார். 370 சட்டப்பிரிவு, 35 ஏ சட்டப்பிரிவு என்றால் என்ன?_
காஷ்மீரில் தொடர் பதற்றம் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டவிதி எண் 370 என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பொருந்தாது:
இந்த 370-ஆவது சட்டப் பிரிவானது 1949-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு துறை ஆகியவற்றை தவிர பிற துறைகள் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இம்மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் இயற்றினால் அது பொருந்தாது.
238 பொருந்தாது:
இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டால் அது ஜம்மு- காஷ்மீருக்கு பொருந்தாது என்ற சட்டப்பிரிவு 238, 1956-ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டது. 370 சட்டப்பிரிவு பகுதி 21-ஆவது பகுதியில் வருகிறது.
எல்லை விவகாரம்:
சட்டவிதி எண் 370-இன் படி மாநிலத்தின் எல்லையை கூட்டவோ குறைக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது. ஆனாவ் இவர்கள் பிற மாநிலங்களில் வாங்கிக் கொள்ளலாம்.
சட்டசபை ஒப்புதல்:
இந்த சட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் சட்டசபை நினைத்தால் இந்த 370 சட்டப்பிரிவில் மாற்றம் கொண்டு வரவோ, அதை நீக்கவோ இல்லாவிட்டால் அப்படியே வைத்துக் கொள்ளவோ முடியும். இந்த சட்டவிதியை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவுறுத்தலின்படி, அப்போதைய ஜனாதிபதி உத்தரவு மூலம் முழுவதுமாக ரத்து செய்ய முடியும். ஆனால் அதை ஜம்மு- காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதலின் பேரில் மட்டுமே முடியும்.
35ஏ என்பது என்ன?
சட்டப்பிரிவு 35 ஏ என்றால் என்ன. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களின் நிரந்தர குடியிருப்பாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு, அரசு உதவித் தொகை வழங்குதல் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற இனங்களில் தீர்மானம் செய்ய இந்த பிரிவின் அடிப்படையில் உரிமை உள்ளது.
சொத்தில் உரிமை இல்லை:
கடந்த 1954-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி ஜனாதிபதியின் உத்தரவுபடி 35 ஏ என்ற சட்டப்பிரிவு, 370 சட்டப்பிரிவில் இணைக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்த மாநிலத்தைச் சாராதவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுகிறது. அதுபோல் காஷ்மீர் மாநில பெண் வேறு மாநில நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் அந்த பெண்ணுக்கு சொத்தில் உரிமை இல்லை.
பதற்றம்:
அதாவது ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுப்பது சட்டவிதி எண் 370 ஆகும். அதே சமயம் காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு உரிமைகளை கொடுப்பது 35 ஏ பிரிவு ஆகும்.இந்த இரு விதிகளில் 370-ஐ நீக்கியதால் காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும்.
ஜம்மு-காஷ்மீர்:ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,உமர் அப்துல்லா கைது , தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலில் மெகபூபா கைது. கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
0 Comments